நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்
யூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம். நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே. பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவ-னாயிராதபடியினால் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
மதங்களைக் குறித்து ஆய்வு செய்து புள்ளிவிரங்களை வெளியிடுவதில் நிபுணர்களான பார்னா குழுவினரின் இணையதளத்தில் மறுபிறப்பு அடைந்த கிறிஸ்தவர்களும் புறமதஸ்தரைப் போலவே விவாகரத்து செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். ரான் சைடர் (Ron Sider) எழுதிய The Scandal of the Evangelical Conscience: Why are Christians living just like the rest of the world என்ற புத்தகத்திலும், மார்க் ரெக்கிரஸ் (Mark Regnerus) Forbidden fruit: Sex and religion in the lives of teenagers என்ற புத்தகத்திலும் இது போன்ற புள்ளிவிவரங்களைக் காணலாம்.
அமெரிக்க சபை உலகத்தைப் போல் அல்லாமல் இல்லை:
என்னுடைய கவனம் மறுபிறப்பு என்கிற வார்த்தையில்தான். பார்னா குழு தங்கள் ஆய்வு அறிக்கையை வெளியிடும்போது மறுபிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய அறிக்கையின் தலைப்பு, “மறுபிறப்பு அடைந்த கிறிஸ்தவர்களும் புறமதஸ்தரைப் போலவே விவாகரத்து செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது”. “Born-again Christians just as likely to divorce as are non Christians”. சைடர், “சுவிசேஷப் போதனையை நம்புகிறவர்கள்”(Evangelicals) என்ற பதத்தை உபயோகித்துள்ளார். ஆனால் அவரும் இதுபோன்ற கருத்தையே வெளியிட்டுள்ளார். சுவிசேஷ போதனையை நம்புகிறவர்களில் 9% மக்களே தசம பாகம் செலுத்துகிறார்கள், திருமணம் வரை எத்தகைய பாலியல் உறவிலும் ஈடுபடமாட்டோம் என்று தீர்மானம் செய்த 12000 வாலிபர்களில் 80% பேர் திருமணத்திற்கு முன்னரே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரியமாக சுவிசேஷ போதனையை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களில் 26% பேர் திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவு கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறார்கள். கத்தோலிக்கர்களையும், பாரம்பரிய புராட்டஸ்டண்டுகளைக் காட்டிலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த, சுவிசேஷ போதனையை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் தங்கள் அருகில் கறுப்பினத்தவர் வசிப்பதை விரும்புவதில்லை.
வேறுவிதமாய் சொல்வதானால், மற்ற உலகத்தாருக்கும் சுவிசேஷ கிறிஸ்தவ சபைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. இச்சபையினர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்துக்குப் போகிறார்கள். வெளியரங்கமானதொரு பக்தியைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கையிலோ, காணும்படியான பெரிய மாற்றம் ஏதுமில்லை. உலகத்தாரைப் போலவே வாழ்ந்து கொண்டு அதற்கு மேல் ஒரு பக்தியைப் போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
முற்றிலும் பிழை:
பார்னா குழுவினர் “மறுபிறப்பு” என்கிற வார்த்தையைக் கொண்டு எவ்விதக் கிறிஸ்தவர்களை விவரிக்க முயற்சிக்கிறார்கள் தெரியுமா? உலகத்தாரிடமிருந்து சற்றும் மாறுபடாத விதத்தில் வாழ்ந்து கொண்டு சபைக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களையும், உலகத்தாரைப் போலவே பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும், மற்றவர்களுக்காக எந்தவிதமான தியாகமும் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், உலகத்தாரைப் போலவே அநியாயமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும், உலகத்தாரைப் போலவே பேராசையுள்ளவர்களாய் வாழ்பவர்களையும், கடவுளை அலட்சியப்படுத்துகின்றதான பொழுது போக்கும் நிகழ்ச்சிகளை உலகத்தாரைப் போலவே அனுபவித்து மகிழ்கிறவர்களையும் தங்கள் ஆராய்ச்சியின் அறிக்கையில் மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்களாக இவர்கள் காண்கிறார்கள். இவர்கள் ஆராய்ச்சியே தவறான கோணத்தில் செல்லுகிறது என்று நான் கூறுகிறேன். மறுபிறப்பு என்பதை இயேசுக்கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் காண்கிற விதத்திலே இவர்கள் காணவில்லை. ஆகவேதான் இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முற்றிலும் பிழை என்கிறேன்.
மறுபிறப்பு என்ற வார்த்தையை இந்த ஆராய்ச்சியாளர்கள் இவ்விதமாய்ப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்: “இயேசுக்கிறிஸ்துவிடம் தனிப்பட்ட விதத்தில் ஒப்புக் கொடுத்தோம். அது இன்றும் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்” என்றும், மேலும் “எங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுக்கிறிஸ்துவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபடியினாலே நாங்கள் மரணத்திற்குப் பின் நிச்சயமாக மோட்சம் செல்வோம் என்று விசுவாசிக்கிறோம்” என்று சொல்லுபவர்கள் அனைவரும் மறுபிறப்பு அடைந்தவர்கள் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் அளித்தவர்களிடம், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்று நினைக்கின்றீர்களா என்ற கேள்வி கேட்கப்படவில்லை. மறுபிறப்புக்கும் சபைசார்புக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை.
வேறுவிதமாகச் சொல்வோமானால், ஜனங்கள் தங்கள் வாயினாலே சொல்லுகிற அறிக்கையை மாத்திரம் வைத்து பார்னா குழு இவர்களை மறுபடியும் பிறந்தவர்கள் என்று விவரிக்கிறது. “நான் இயேசுவிடம் தனிப்பட்ட முறையில் என்னை ஒப்புக் கொடுத்தேன். அது எனக்கு அவசியம். என் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுக்கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபடியினால் நான் மரணத்திற்குப் பின் நிச்சயமாக மோட்சத்திற்கு செல்வேன் என்று விசுவாசிக்கிறேன்” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் கூற்றை அந்த ஆராய்ச்சியாளர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களை மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்களாக எண்ணுகிறார்கள். மேலும் மறுபிறப்பைக் குறித்த மிகவும் ஆழமான வேதாகம உண்மையை சரிவர புரிந்து கொள்ளாமல் அந்த வார்த்தைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில், உலகத்தாருக்கு எப்படி பாவத்தின் மேல் வெற்றி இல்லையோ அப்படியேதான் மறுபடியும் பிறந்தவர்களின் நிலையும் இருக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.
புதியஏற்பாட்டின் மாறுபட்ட கோணம்:
புதிய ஏற்பாடோ மறுபிறப்பை வேறு கோணத்தில் காண்கிறது. இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியே தவறு என்று நான் கூறவில்லை. அவர்கள் ஆராய்ச்சியின் முடிவு திடுக்கிடத் தக்க உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. சபையானது அவர்கள் கூறுவதைப் போல உலகப்பிரகாரமானதாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் புதிய ஏற்பாடானது, மறுபிறப்பைக் குறித்து இவர்கள் நினைப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் காண்கிறது. முதலில் விசுவாசம், பின்னர் மறுபிறப்பு, பிறகு உலகத்தாரைப் போல வாழ்தல் என்ற வரிசைப் பிரகாரம் சென்று, இறுதியில் மறுபிறப்பு அடைந்தவர்கள் வாழ்க்கையில் மாற்றம் இல்லையென்று ஆராய்ச்சியாளர்கள் முடிக்கிறார்கள். ஆனால், புதிய ஏற்பாடு வேறு கோணத்தில் கூறுகிறது. மறுபிறப்பு அடைந்தவர்களின் வாழ்க்கை நிச்சயமாக மாறித்தான் இருக்கும் என்பது வேதாகம விளக்கமாகும். பார்னா குழுவினர் காண்பது போல, அவர்களின் வாழ்க்கை சற்றும் மாறவில்லையே என்றால், அதற்கு அவர்கள் மறுபிறப்பு அடையவேயில்லை என்பதுதான் அர்த்தம். பார்னா குழுவினர் மறுபிறப்பு என்பதை களங்கப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், புதிய ஏற்பாடானது, மறுபிறப்பு என்கிற வார்த்தையை களங்கப்படுத்தாமல், அதன் புனிதத்தைப் பாதுகாக்கிறது. உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்பவர்களை வேதம் ஒருபோதும் மறுபிறப்போடு சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதேயில்லை.
உதாரணமாக 1யோவான் வலியுறுத்தும் முக்கிய காரியங்களில் இது ஒன்றாகும்.
“அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியை செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்” – 1யோவா 2:29
“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான்” – 1யோவா 3:9
“பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்” – 1யோவா 4:7
“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” – 1யோவா 5:4
“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் என்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். பொல்லாங்கன் அவனைத் தொடான்” – 1யோவா 5:18
இதுபோன்ற வசனங்களை இந்த தொடர்பாடத்தில் நாம் அவ்வப்போது காண்போம். அநேக கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது. பூரண நிலையை அடையலாம் என்கிற உபதேசத்தைத் தள்ளி வைத்து, உண்மையாகவே மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் சந்திக்கும் தோல்விகளை கருத்தில் கொண்டு இதில் நாம் ஆராய்வோம். அந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போன்ற கிறிஸ்தவர்களும் இருப்பது உண்மைதானே என்று தோன்றுகிறதல்லவா? அதாவது, மறுபிறப்பு அடைந்தவர்களும் உலகத்தாரைப் போன்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற முடிவு உண்மைதானே என்பது போல தோன்றுகிறதா? இந்தக் கூற்றை நாம் எதிர்ப்போம். ஏனெனில் அது உண்மையல்ல. உலகப்பிரகாரமான மக்கள் சபைகளில் இருப்பார்கள் என்பது வேதத்திற்குத் தெரியும். அதன் காரணமாகவே யோவான் முதலாம் நிருபம் எழுதப்பட்டது. மறுபிறப்பு அடைந்தவர்கள் உலகத்தாரைப் போல இருப்பார்கள் என்று சொல்லாமல், சபையிலே மறுபிறப்பு அடையாத உலகத்தாரும் ஊடுருவியிருப்பார்கள் என்பதை புதியஏற்பாடு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
மறுபிறப்பு!
புதிதாகப் பிறத்தலைக் குறித்ததான ஒரு தொடர் தியானத்தை நாம் இன்று தொடங்கியிருக்கிறோம். மறுபடியும் பிறத்தலைக் குறித்து வேதாகமம் என்ன கற்றுக் கொடுக்கிறது? மறுபடியும் பிறத்தல் என்பதற்கு நாம் இன்னொரு வார்த்தையையும் உபயோகிக்கலாம். அதை, “உயிர்ப்பிக்கப்படுதல்” (Regeneration) என்றும் குறிப்பிடலாம். இந்த வார்த்தையை நாம் அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளுதல் பயனளிக்கும். இந்த வார்த்தையை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளே, நீங்களும் இந்த வார்த்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோருக்கு அவ்வப்போது இதை ஞாபகப்படுத்துவீர்களா? ஏனென்றால் ஒருவேளை அவர்கள் உங்களிடம் பேசும்போது இவ்வார்த்தையை அதிகமாக உபயோகித்திருக்க மாட்டார்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்றதும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து, “உயிர்ப்பிக்கப்படுதல்” என்கிற புதிய வார்த்தையைக் கற்றுக் கொண்டோமே. உயிர்ப்பிக்கப்படுதல் என்றால் மறுபடியும் பிறத்தல் ஆகும் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். மறுபடியுமாக பிழைத்தவர்களைப் பார்த்து, அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமல்லவா? அதாவது, அவர் மறுபடியும் பிறந்தவர் என்கிறோம். இப்படியாக நீங்கள் உங்கள் பெற்றோருக்கு இந்தப் புதிய வார்த்தையை சொல்லிக் கொண்டேயிருப்பீர்களானால் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நாம் யாவரும் இப்புதிய வார்த்தையை ஒரேவிதமாக உபயோகிக்கும்போது குழப்பம் அடையாமல் இருப்போம்.
1) மறுபிறப்பு என்கிற வேதாகம வார்த்தையின் புனிதத் தன்மைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலாவது செய்தியில் நான் பொதுவாக சொல்ல விரும்புவது: நாம் எதற்காக இந்தப் பாடங்களைப் படிக்கப் போகிறோம் என்பதுதான். அதில் முதலாவது காரியத்தை ஏற்கனவே பார்த்தோம். பார்னா குழுவினர் போல, “மறுபிறப்பு” என்கிற வார்த்தையை அர்த்தம் விளங்காமல் உபயோகிக்கும்போது அந்த வார்த்தைக்கு களங்கம் விளைகிறது. இது ஒரு தவறான விதம். இது ஒன்று மாத்திரமல்ல, பலவிதங்களில் அது தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது. யாராவது வியாதியிலிருந்து மீண்டாலோ, அல்லது ஏதாவதொரு காரியம் புதுப்பிக்கப்பட்டாலோ அதைக் குறிக்க மறுபிறப்படைந்ததாகக் கூறுவதுண்டு. உதாரணமாக, சிஸ்கோ கம்பெனி மறுபிறப்படைந்தது! பசுமைப்புரட்சி மறுபிறப்படைந்திருக்கிறது! டேவி கப்பல் துறைமுகம் மறுபிறப்படைந்துள்ளது! பாஸ்டன் நகரின் மேற்குப் பகுதி மறுபிறப்படைந்தது! பாரம்பரிய யூத உணவு மறுபிறப்படைந்தது! இப்படியாக மறுபிறப்பு என்கிற இந்த வார்த்தையானது பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, 45% அமெரிக்க மக்கள் தாங்கள் மறுபிறப்பு அடைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் என்பதை நாம் வாசிக்கும்போது அதைக் குறித்தும் கவனமாக சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
வேதாகமத்தில் மறுபிறப்பு என்கிற இந்த வார்த்தையானது மிகவும் விசேஷமானது. மிகவும் முக்கியமானது. இதைக் குறித்து கடவுள் வேதத்தில் என்ன கூறுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. மறுபிறப்பு என்பதற்கு அர்த்தம் என்னவென்பதை இனி வரும் தியானங்களில் கூறப் போகிறேன்.
2) உங்களுக்கு என்ன நடந்ததென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
மறுபிறப்பைக் குறித்து நான் கூறவிரும்புவதற்கு மற்றொரு காரணம், மறுபிறப்பின்போது உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் பன்மடங்கு மேன்மையான காரியம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. நான் நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலுங்கூட அது அதிக மகிமை வாய்ந்தது. அது, மனிதபுத்திக்கு எட்டாத ஆச்சரியமானது. ஆனால், வேதாகமத்தில் அதைக் குறித்துக் கொஞ்சமாகக் கூறப்பட்டிருப்பதால் அது விளங்காத புதிராயிருக்கிறது என்பது சற்றும் உண்மையல்ல; உண்மையில் வேதாகமத்தில் அதைக் குறித்து அதிகமாகவே காணப்படுகிறது. அவை எல்லாவற்றையும் சேர்த்து கிரகித்துக் கொள்கையில் இன்னும் அதிகமாக விளங்குகிறது. ஆகவே, உங்களுடைய மறுபிறப்பில் என்ன நிகழ்ந்ததென்பதைக் குறித்து நீங்கள் இன்னும் அதிகமாக, தெளிவாக விளங்கிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
3) மக்கள் மறுபிறப்பை அடைவதற்கு நான் உதவியாயிருக்கும்படி ஆசைப்படுகிறேன்.
மக்கள் மறுபிறப்பை அடைவதற்கு உதவியாக இருப்பதற்காக நான் இந்தத் தியானங்களை செய்ய விரும்புகிறேன். அவர்களுக்குள் என்ன நிகழ வேண்டுமென்பதை நான் அவர்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். உங்களுடைய ஜெபமும் எனக்குத் தேவை. வரும் வாரங்களில் இந்த தியானங்களின் மூலமாக அநேகர் மறுபிறப்பை அடைவதற்கு நான் ஒரு கருவியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். மறுபிறப்பு என்பது மனிதனால் ஏற்படுவதல்ல. இதைக் குறித்து நாம் விவரமாகப் படிப்போம். ஒருவரையும் மறுபடியும் பிறக்க வைக்க உங்களால் முடியாது. என்னாலும் முடியாது. கடவுள்தான் அதை நடப்பிக்கிறவர். மறுபிறப்பு நம்மால் ஏற்படுவதில்லை. ஆனால் நமக்குள் ஏற்படுகிறது.
சுவிசேஷத்தின் மூலமாக மறுபிறப்பு நிகழ்கிறது
அது, தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக மட்டுமே எப்போதும் நிகழ்கிறது. “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும், ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழியாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். . . . உங்களுக்கு சுவிசேஷமாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே” 1பேது 1:23,25. கடவுள்தாம் தமது பிள்ளைகளை மறுபடியும் பிறக்கச் செய்கிறாரென்றாலும், அதை அவர் தமது வசனமாகிய வித்தைக் கொண்டு நிகழச் செய்கிறார். அந்த சுவிசேஷத்தைதான் நாங்கள் உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். அந்த அற்புதமானது இந்த தியானங்களின் மூலமாக நிகழும்படி நீங்களும் என்னோடேகூட சேர்ந்து ஜெபியுங்கள். மறுபிறப்பைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிற உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் இந்த தொடர் தியானங்களைக் கேட்கும்படிக்கு அழைத்துக் கொண்டுவாருங்கள். அதை நான் தெளிவாக விளக்கிச் சொல்ல முயற்சிப்பேன். அவர்களே தங்களுடைய வேதாகமத்திலிருந்து பார்த்துக் கொள்ளும்படியாக வசனங்களை அவர்களுக்கு சுட்டிக் காண்பிப்பேன்.
மறுபிறப்பில் உங்களுக்குள்ளாக என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும், மறுபிறப்பை அடையப் போகிற மற்றவர்களுக்கு என்ன நிகழப் போகிறது என்பதை அவர்களும் தெரிந்துகொள்ளவும் வேண்டுமென்று நான் விரும்பியதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.
- நீங்கள் உண்மையாகவே மறுபிறப்பு அடைந்தவர்களாக இருந்தால், கர்த்தர் உங்களுக்கு செய்தவைகளைக் குறித்த அறிவிலும் அவர் கிருபையிலும் வளருவீர்களானால், கர்த்தரோடுள்ள உங்கள் ஐக்கியம் மிகவும் இனிமையாக இருக்கும். அவர் மெய்யாலுமே உங்கள் தகப்பன் என்கிற உணர்வு இன்னும் ஆழமாக அதிகரிக்கும். அந்த அனுபவத்தை நீங்கள் அடைய வேண்டுமென நான் விரும்புகிறேன்.
- இவ்விதமான விளங்குதலைக் கர்த்தர் தமது சபைக்கு அருளிச் செய்ய சித்தங்கொண்டாரானால், உலகமானது உண்மையான அன்பு என்னவென்பதையும், தைரியத்தையும், தியாகமனப்பான்மையையும் சபையின் வாயிலாகக் கற்றுக் கொள்ளும். உலகத்தாரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிற பெயர்க்கிறிஸ்தவர்களைப் பார்த்து அவைகளைக் குறித்ததான தவறான எண்ணத்தை மக்கள் அடைய மாட்டார்கள்.
- உங்களது மறுபிறப்பில் உங்களுக்கு என்ன நிகழ்ந்ததென்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால், கடவுளையும் அவரது ஆவியையும், அவரது குமாரனையும், அவரது வசனங்களையும் முன்பைக் காட்டிலும் இன்னும் அதிகமாக மதித்துப் போற்றுவீர்கள். இவைகள்தான் மறுபிறப்பைக் குறித்து நாம் தியானிப்பதற்குக் காரணங்களாயிருப்பவை.
மறுபிறப்பைக் குறித்ததான சில முக்கியமான கேள்விகள்:
நாம் இந்த தியானங்களில் சில முக்கியமான கேள்விகளை சந்திப்போம். அதில் ஒன்று: மறுபிறப்பு என்றால் என்ன? அதில் என்னதான் நடக்கிறது? அது எப்படியிருக்கும்? என்ன மாற்றம் ஏற்படுகிறது? முன்பு இல்லாத எந்த காரியம் நம்மில் உருவாகிறது?
இன்னொரு கேள்வி: கடவுள் நம்மைத் தம்மிடமாக வரவழைத்து நம்மை இரட்சிக்கிறார் என்பது போன்று வேதாகமத்தில் காண்கிற பல காரியங்களோடு மறுபிறப்பு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது? உதாரணமாக, கீழ்க்காணும் பலவிதமான ஆவிக்குரிய காரியங்களோடு மறுபிறப்பு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது என நாம் ஆராயலாம்:
கடவுளின் ஆக்கபூர்வமான அழைப்பு (Effectual Calling), மறுபிறப்பு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது? (“எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்”-ரோம 8:30)
புது சிருஷ்டியாக்குதல் (“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்” – 2கொரி 5:17)
கடவுள் நம்மைக் கிறிஸ்துவிடம் இழுத்துக் கொள்ளுதல் (“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” – யோவா 6:4)
கடவுள் தமது குமாரனுக்கு ஜனங்களைக் கொடுத்தல் (“பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” – யோவா 6:37)
கடவுள் நமது இருதயத்தைத் திறத்தல் (“பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்” – அப் 16:14)
கடவுள் நமது இருதயத்தை வெளிச்சமாக்குதல் (“தேவன், இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” – 2கொரி 4:6)
கடவுள் நம்மிலுள்ள கல்லான இருதயத்தை எடுத்துவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுத்தல்(“கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” – எசேக் 36:26)
கடவுள் நம்மை உயிர்ப்பித்தல் (“அக்கிரமங்களினால் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்” – எபே 2:5)
கடவுள் நம்மைத் தமது குடும்பத்துக்குள் சுவீகரித்துக் கொள்ளுதல் (“அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவீகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” – ரோம 8:15)
கடவுள் நம்மை இரட்சித்தபோது, நமக்கு நேர்ந்த மேற்கூறிய சம்பவங்களெல்லாம் அவர் நம்மை உயிர்ப்பித்த செயலோடு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது?
நாம் கேட்கக்கூடிய இன்னுமொரு கேள்வி: எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும்? இயேசுக்கிறிஸ்து யோவா 3:7ல் நிக்கொதேமுவிடம் “மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று உறுதியாகக் கூறுகிறார். இதை ஒரு யோசனையாகக் சொல்லுகிறேன் என்று அவர் கூறவில்லை. இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டால் உன் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் எனக் கூறவில்லை. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்” என்று ஆணித்தரமாக ஏன் அவர் கூறவேண்டும்? அதன் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதால்தான். நாமும் இந்த விஷயத்தைக் குறித்து நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். நாம் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளும் வரையிலும், எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையிலும் இரட்சிப்பற்ற நமது பரிதாபகரமான நிலையைக் குறித்து நாம் உணர்வற்றவர்களாகவே இருப்போம். தங்களிடமிருக்கிற கோளாறு அநேகருக்குத் தெரியாமல் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய மோசமான நிலையை உணர்ந்து கொள்வதற்கு ஒரு வழி, கடவுள் வகுத்திருக்கின்ற நிவாரணமாகிய மறுபிறப்பை அவர்களுக்குக் காட்டுதல். நீங்கள் காலில் ஒரு சிறிய புண்ணோடு மருத்துவரிடம் செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நன்கு பரிசோதித்த பின் அந்த மருத்துவர், உங்களிடம், உங்கள் காலை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதுதான் உங்களுக்கு அந்த சிறிய புண்ணின் பயங்கரம் எவ்வளவு பெரிதென்று தெரியவரும். மருத்துவர் கூறிய நிவாரணத்தை வைத்துதான் உங்களுக்கு அதன் பயங்கரம் தெரிகிறது. அதுபோல, மனிதகுலத்துக்கு இயேசுக்கிறிஸ்து கூறும் ஒரே நிவாரணவழி, “மனிதன் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும்” என்பதே.
நாம் பார்க்கவேண்டிய இன்னொரு கேள்வி, மறுபிறப்பு எப்படி நிகழ்கிறது என்பதாகும். அது கடவுளுடைய செயலானால், அதை நான் எவ்விதத்தில் உணர்ந்து கொள்ளுவேன்? அது நிகழ்வதற்கு நான் ஏதாவது செய்யக் கூடுமா?
கடைசியாக நாம் சந்திக்க வேண்டிய கேள்வி: மறுபிறப்பின் பலாபலன்கள் யாவை? எது மாறுகிறது? மறுபிறப்பு அடைந்த மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
சபையில் இருப்பவர்களில் இலட்சக்கணக்கானவர்கள் மறுபிறப்பு அடையாதவர்களே
இந்த வார்த்தை நம்மை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்துகிறது. மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்களும் உலகத்தாரைப் போலவே பாவ வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற ஆராய்ச்சியாளர்களின் முடிவை ஆதரிப்பது போல அது காணப்படுகிறது. ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” – 1யோவா 5:4 என்று வேதம் கூறுகிறது. ஆனால், சபைக்கு வருபவர்களில் லட்சக்கணக்கானவர்கள் மறுபிறப்பு அடையவேயில்லை என்கிற என்னுடைய கூற்று சபைக்கு சந்தோஷமளிக்காது.
உண்மையாகவே மறுபிறப்பு அடைந்திருக்கிற ஜனங்களே! கர்த்தருடைய ஆவியைப் பெற்றிருப்பவர்களே, கடவுளை நேசிப்பவர்களே, தவறான வழியில் சென்று கொண்டிருப்பவர்களைக் குறித்து அக்கறை உள்ளவர்களே, நீங்களும் என்னோடேகூட சேர்ந்து ஜெபியுங்கள். ஆவிக்குரியபிரகாரமாக மரித்த நிலையில் இருப்பவர்களை இந்த தியானங்கள் உயிர்ப்பிக்கட்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். அவர்கள் சபைக்கே ஒருபோதும் செல்லாதவர்களாக இருந்தாலும் சரி, அல்லது பிறந்தது முதல் சபைக்கு போய்க் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் உயிர்பெற இந்தத் தியானங்கள் வழிவகுக்கட்டும்.