நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்? பாகம் 2
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பிணாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.
கடந்த வாரத்திலே, நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தோம். எபே 2:4-5 வசனங்களைக் கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தோம் - "தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்". "தேவன் நம்மை உயிர்ப்பித்தார்" என்பதும், நம்முடைய மறுபிறப்பும் ஒன்றுதான் என நான் உங்களுக்குக் கூறினேன். ஏன் அவர் நம்மை மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்குக் காரணம் நாம் மரித்தவர்களாய் இருப்பதினால்தான். "தேவனோ . . அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை . . உயிர்ப்பித்தார்". அதுதான் நமக்குத் தேவையாயிருக்கிறது - நமது இருதயத்தில் ஆவிக்குரிய ஜீவன் சிருஷ்டிக்கப்படுவதாகிய அற்புதம் நிகழ வேண்டியதாக இருக்கிறது. நாம் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்துப்போன நிலமையில் இருப்பதால் அது நமக்கு தேவையாயிருக்கிறது. மரித்த நிலையில் நம்மால் கிறிஸ்துவிலிருக்கும் அழகையும் அவருடைய விலைமதிப்பற்ற தன்மையையும், அவர் உண்மையில் யாரென்பதையும் பார்க்கவோ, உணரவோ, அவரைப் பற்றிக்கொள்ளவோ இயலாத நிலையில் இருக்கிறோம். "எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளை கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல, மறுபிறப்பு அடையாதவர்களால் கூற முடியாது.
நாம் இருக்கும் இந்த மரித்துப்போன நிலை என்ன என்பதையும் கடந்த தியானத்திலே பார்க்க ஆரம்பித்திருந்தோம். இந்த நிலையை பத்து விதங்களில் புதிய ஏற்பாடு எப்படி விவரிக்கிறது என்று நான் சொல்ல ஆரம்பித்தேன். அதில் கடந்த தியானத்தில் நான் கூறியதாவது:
- அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்த நிலையிலிருக்கிறோம் (எபே 2:5).
- நாம் சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகளாயிருக்கிறோம் (எபே 2:3).
- நாம் ஒளியைப் பகைத்து, இருளை விரும்புகிறவர்களாயிருக்கிறோம் (யோவா 3:19-20)
- நமது இருதயம் கல்லைப் போல கடினமாயிருக்கிறது (எசேக் 36:26; எபே 4:18).
- நாம் கடவுளுக்குக் கீழ்ப்படியக்கூடாமலும், அவரை பிரியப்படுத்தாமலும் இருக்கிறோம் (ரோம 8:7-8).
- நாம் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறோம் (எபே 4:18; 1கொரி 2:14).
- நாம் கிறிஸ்துவிடம் வரமுடியாமலும், அவரைக் கர்த்தரென்று ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கிறோம் (யோவா 6:44, 65; 1கொரி 12:3).
மறுபிறப்பில்லாத போது நாமிருக்கும் நிலமை.
இப்போது, அதில் கடைசியாக நான் கூறவிருந்த நமது மற்ற மூன்று நிலையையும் பார்ப்போம்.
8) மறுபிறப்பில்லாத நிலையில் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்கிறோம் (ரோம 6:17).
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் நம்மை விடுதலை செய்ததின் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் பவுல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். "முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று ரோம 6:17ல் கூறுகிறார். ஒரு காலத்தில் நாம் பாவத்தை மிகவும் விரும்பி சிநேகித்தபடியினால் அதை விட்டு விலகவோ, அதை அழிக்கவோ கூடாமல் இருந்தோம். பிறகு ஏதோ நிகழ்ந்தது. மறுபிறப்பு உண்டாயிற்று. நாம் புதிதான ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படியாகக் கடவுள் செய்தார். பாவத்தை வெறுத்து நீதியை விரும்புகிறதான ஒரு புதிய சுபாவத்தை அடையும்படி செய்தார். இந்த பெரிய விடுதலைக்காக பவுல், மனிதனுக்கு அல்ல, கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். "முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது . . நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்". கடவுள் நம்மை ஆவிக்குரிய மரணநிலையிலிருந்து உயிர்ப்பித்து, பாவத்தை ஒழித்து பரிசுத்தமாக நடப்பதில் மகிழ்ச்சியடைகின்றதான புதிய ஜீவனைக் கொடுக்கிற வரைக்கும் நாம் பாவத்துக்கு அடிமைகள்தான். விடுதலைபெற முடியாத அடிமைகள்! ஆகவேதான் மறுபிறப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
9) மறுபிறப்பில்லாத நிலையில் நாம் சாத்தானுக்கு அடிமைகளாயிருக்கிறோம் (எபே 2:1-2 2தீமோ 2:24-26).
ஆவிக்குரிய மரணநிலையின் பயங்கரங்களில் இதுவும் ஒன்று. மரணநிலைமை என்பது சாத்தானுடன் சம்பந்தம் இல்லாத செயலற்ற நிலைமை அல்ல. சாத்தானோடு நாம் மிகவும் ஒத்துப் போகிறவர்களாகவே காணப்படுகிறோம். எபே 2:1-2ல் இத்தகைய மரணநிலையைக் குறித்து பவுல் எப்படி விவரிக்கிறாரென்று பாருங்கள்: "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள்". வேறுவிதமாக சொல்வதானால், உயிர்ப்பிக்கப்படாதவனின் அடையாளமானது, அவனுடைய ஆசைகளும், விருப்பங்களும் ஆகாயத்து அதிகார பிரபுவுக்கு ஏற்றவிதமாக இருப்பதே. உயிர்ப்பிக்கப்படாதவன், பிசாசு இருக்கிறதையே நம்பாமல் பரிகசிப்பான். பொய்க்குப் பிதாவாக இருப்பவனோடு ஒத்துப் போகிறவன், பிசாசு உண்டென்பதை ஒத்துக் கொள்ளாததில் வியப்பில்லை.
பிசாசோடு உள்ள உறவு 2தீமோ 2:24-26ல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு சொல்லப்பட்டுள்ள புத்திமதி. பிசாசின் பிடியில் இருப்பவர்களை எப்படி விடுவிப்பது என அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது: "கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனும், தீமையை சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத் தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்".
"சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்" என்று பவுல் கூறுவதுதான் மறுபிறப்பில் நிகழுகிறது. பிசாசின் பிடியிலிருந்து ஜனங்களைத் தப்புவிக்கும் முக்கிய சாதனம் இதுதான். கடவுள் மனந்திரும்புதலை அருளுதல் - அதாவது பாவத்தின் அகோரத்தையும் ஆபத்தையும் பார்க்கும் விதமாகவும், கிறிஸ்துவின் அருமையையும் மதிப்பையும் உணரும்விதமாகவும் ஒரு புதிய ஜீவனை அவர் அவனில் உயிர்ப்பிக்கிறார். அந்த உண்மையானது, சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், காரிருளில் இருக்கிற ஒரு மனிதன், தனது கழுத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிற ஒரு ஆபரணத்தை வருடிக் கொண்டிருக்கையில், ஆவிக்குரிய வெளிச்சமானது அவன் மீது வீசும்போதுதான் அவனுக்குத் தெரிகிறது, அது ஒரு ஆபரணமல்ல, கரப்பான்பூச்சியென்று. உடனே அவன் அதை உதறித் தள்ளி, அது தன்னைவிட்டு அகன்று போகும்படி செய்வானல்லவா? அது போலத்தான் ஜனங்களும் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மறுபிறப்பாகிய இந்த அற்புதத்தை தேவன் நம்மில் நடப்பிக்கும்வரை, நாம் பொய்க்கு பிதாவாகிய சாத்தானின் பிடியில்தான் அடிமைகளாக இருக்கிறோம். ஏனென்றால் நம்மைக் குறித்து நம் இஷ்டம்போல் நினைத்துக் கொள்ளவே நாம் விரும்புகிறோம்.
10) மறுபிறப்பில்லாமல் என்னில் நன்மை ஏதும் வாசமாயிருப்பதில்லை (ரோம 7:18).
இந்த வாக்கியம் மறுபிறப்பை அடையாதவர்களுக்கு அர்த்தமற்றதாகத் தென்படும். ஏனென்றால், அவர்களுக்கு நன்மை என்றால் என்னவென்று நன்றாகத் தெரியும். அவர்கள் அநேக நன்மைகளை செய்கிறவர்களாகவும் இருப்பார்கள். அதோடு, அநேக தீமைகளை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். கடவுள் ஏற்படுத்தியதும், பராமரித்து வருகிறதுமான எதையும் கடவுளின் கிருபையை சார்ந்திராமலும், அவருடைய மகிமைக்கென்றும் செய்யாமல் இருந்தால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை உணராவிட்டால் மேற்கூறிய வாக்கியம் அவர்களுக்குப் புரியாத ஒன்றாய் இருக்கும். ஒருவிதத்தில் மனிதநிலையும் (அவன் ஆத்துமா, மனது, இருதயம், மூளை, கண், கை போன்றவை), மனிதசமூகநிலையும் (திருமணம், குடும்பம், அரசாங்கம், வியாபாரம் போன்றவை) நல்ல காரியங்களே. தேவனே அவைகளை ஏற்படுத்தியிருக்கிறார், ஆணையிட்டிருக்கிறார், பராமரிக்கிறார். அவைகள் செயல்பட்டுக் கொண்டுவருவது நல்லதே.
ஆனால் அவை யாவும் கடவுளின் மகிமைக்கென்றே இருக்கின்றன. கடவுளை நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுமனதோடும் அன்புகூர வேண்டுமென்ற கட்டளையைப் பெற்றிருக்கிறோம் (மத் 22:37). மேலும், நாம் அவர் படைத்தவைகளை உபயோகித்து, எல்லாவற்றிலேயும் தேவன் மகிமைப்படும்படியாகவே செய்ய வேண்டும் (1பேது 4:11). கடவுள் உருவாக்கியவைகளை உபயோகிக்கிற மக்கள், அவருடைய கிருபையை சார்ந்திராமலும், அவருடைய மகிமையை வெளிப்படுத்தும் விதமாக நடவாமலும் இருக்கிற மக்கள் அவர் சிருஷ்டித்தவைகளை களங்கப்படுத்துகிறார்கள். தங்களுடைய அவிசுவாசத்தை வெளிப்படுத்துகிற சாதனங்களாக அவைகளை உபயோகிக்கிறார்கள். அவைகளை கெடுத்துப் போடுகிறார்கள்.
ஆகவேதான் பவுல் ரோம 7:18ல் "என்னிடத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறேன்" என்று சொல்லும்போது, அதை விளக்கும் விதமாக, "அதாவது என் மாம்சத்தில்" என்று சேர்த்து சொல்லுகிறார். மறுபிறப்புக்குப் பின்பாக பவுலிடத்தில் நன்மை காணப்படுகிறது. விசுவாசம் நன்மையே. பரிசுத்தஆவி நன்மையே. புதிய ஆவிக்குரிய சுபாவம் நன்மையே. பரிசுத்தத்தில் வளருதல் நன்மையே. ஆனால் அவரது மாம்சத்தில், மறுபிறப்பற்ற மானுடநிலையில் நன்மை வாசமாய் இல்லை என்று விளக்குகிறார். உண்டாக்கப்பட்ட நன்மையானவைகள் யாவும், கடவுளை மையமாக வைத்து இயங்காமல், மனிதனை மையமாகக் கொண்டு இயங்கினால் கெட்டுத்தான் போகும்.
இவை யாவும் மறுபிறப்பற்ற நிலையில் நமது பலதரப்பட்ட நிலைகள் ஆகும். மறுபிறப்பற்ற நிலையில் நாம் எப்படி இருக்கிறோமென்றால், பவுல் எபே 2:12ல் கூறிய வார்த்தைகளையே உபயோகித்துச் சொல்வோமானால், "கிறிஸ்துவை சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகில் தேவனற்றவர்களுமாய்" இருக்கிறோம். அதனால்தான் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும். மறுபிறப்பில்லாமல் நமது நிலமை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. அதை நற்குணங்களை ஏற்படுத்திக் கொள்வதின் மூலமாக சரிசெய்து கொள்ள முடியாது. செத்த மனிதன் எந்த நற்செயலையும் செய்ய இயலாது. செத்த மனிதர்களுக்கு ஏதாவது நடக்க வேண்டுமானால் முதலில் ஒன்று நிகழ வேண்டும்: முதலாவது அவர்களுக்கு உயிர் கொடுக்கப்பட வேண்டும். அதாவது, அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்.
நமது கேள்வியின் மறுபாதி
நாம் இதுவரைக்கும் ஏன் என்கிற நமது கேள்வியின் ஒரு பகுதியைத்தான் கேட்டு வந்தோம். ஏன் மறுபிறப்பு அவசியம்? என்கிற கேள்வியில் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. நாம் இதுவரை பதிலளித்தது: என்னில் ஏன் ஆவிக்குரிய ஜீவன் இல்லை? அதை நானாகவே ஏன் பெற்றுக்கொள்ள முடியாது? இதற்கு நாம் கூறிய பதில்: நாம் ஆவிக்குரிய விஷயங்களை எதிர்க்கிறவர்களாகவும், சுயநலமுள்ளவர்களாகவும், எதிர்பேசுகிறவர்களாகவும், கடின மனமுள்ளவர்களாகவும், விரோதிகளாகவும் இருப்பது மாத்திரமல்லாமல், கிறிஸ்துவின் அருமையையும் மதிப்பையும் காணாதவர்களாயும் இருக்கிறோம். ஆகவே நம்மால் அவரிடம் வந்து ஜீவனைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை. ஆகவே நம்மை உயிர்ப்பிக்கிறதான ஒரு அற்புதத்தை தேவன் நம்மில் நடப்பிக்க வேண்டியதாக இருக்கிறது. நாம் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியமாகிறது. ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை கேட்கிற முதலாவது விதம் இதுவாக இருக்கிறது.
ஆனால், இக்கேள்வியில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. இந்தக் கேள்வியானது, எதற்காக மறுபிறப்பு உங்களுக்கு அவசியம்? உங்களுடைய தேவைகளில் எதை அது சந்திக்கிறது? அது இல்லாமல் உங்களுக்கு என்ன கிடைக்காது? ஆகிய கேள்விகளையும் அது உள்ளடக்கியுள்ளது. முதலாவது விதம், பின்னோக்கிப் பார்த்து, நமது நிலமை எவ்வளவு மோசமாக இருந்திருந்தால், மறுபிறப்பு நமக்கு அவசியம் தேவை என்பதை ஆராய்வது. இரண்டாவது விதம், முன்னோக்கிப் பார்த்து, மறுபிறப்பு மட்டுமே தரும் காரியங்களைப் பெற்றுக் கொள்வதற்கு என்ன நிகழவேண்டும் என பார்ப்பதாகும். அதைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
மறுபிறப்பில்லாமல் நமக்கு என்ன கிடைக்காது?
இயேசுவோடு இணைக்கப்பட்டதான ஒரு புதிய ஆவிக்குரிய ஜீவன் எதற்கு நமக்குத் தேவை? ஒரு பதில்: ஏனென்றால் நாம் மரித்தவர்களாயிருக்கிறோம். அடுத்த பதில்: ஏனென்றால் இந்த புதிய ஜீவன் இல்லாமல் நமக்கு இல்லாதவை . . . எவை? அதுதான் இப்போதைய கேள்வி. புதியஜீவனில்லாமல் நமக்கு என்ன இல்லை?
இதற்குரிய பதிலை நான் இன்றைக்கு சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். அடுத்த வாரத்தில் இதுசம்பந்தமான நடைமுறை விவரங்களைக் கூறுவேன். அடுத்த வாரம் கிறிஸ்மஸ்க்கு முந்தின ஞாயிறு. அந்த வாரத்தில் நான் பேசுவதற்காக எடுத்துக் கொண்டிருக்கும் வசனம் 1யோவா 3:8 - "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்" என்பதாகும். இயேசு மனிதனாக அவதரித்ததற்கு அதுதான் காரணம் - பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கு. அந்த செய்தியில் நீங்கள் இயேசுவின் பிறப்பிற்கும், உயிர்ப்பித்தலுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் காண்பீர்கள். அல்லது நமது மறுபிறப்பிற்கும் இயேசுவின் பிறப்பிற்கும் உள்ள சம்பந்தத்தை காண்பீர்கள்.
பரலோக ராஜ்ஜியம்
ஆனால், இன்றைக்கு நான், மறுபிறப்பில்லையானால் நமக்கு என்னவெல்லாம் கிடைக்காது என்பதன் பதிலை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இயேசுவின் பதில் எளிமையாகவும், முழுமையாகவும், பயங்கரமாகவும் இருக்கிறது: "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்".
மறுபிறப்பில்லாமல் நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணவே மாட்டோம். அதாவது, நாம் பரலோக ராஜ்ஜியத்துக்கு போகவே மாட்டோம். நாம் நித்தியத்துக்கும் அழிந்து போவோம். மறுபிறப்பில்லாமல் நமக்கு என்ன இருக்காது? நன்மையானது எதுவும் நமக்கு இருக்காது. சதாகாலமும் துன்பம் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்போம்.
அது ஏன் அப்படி என்பதை நாம் விவரித்துக் காண்பிப்பது அவசியமாக இருக்கிறது. மறுபிறப்பின் மூலமாக தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்பதையும், நம்மை தமது ராஜ்ஜியத்துக்கு எவ்விதமாக அழைத்துச் செல்கிறார் என்பதையும் நாம் விரிவாகப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. நமது மறுபிறப்பிற்கும், தமது குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவின் மரணம்-உயிர்த்தெழுதலின் மூலமாக நம்மை இரட்சிப்பதற்கு தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதற்கும் இடையேயுள்ள சம்பந்தத்தை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம். இந்த கேள்விக்கு நான் ஒன்றிற்கொன்று தொடர்புடைய ஐந்து பதில்களைக் கொடுக்கப் போகிறேன். முதலில், எதுவெல்லாம் இருக்காது என்கிற விதத்திலும், முடிவில் எதுவெல்லாம் இருக்கும் என்கிற விதத்திலும் விடையளிக்கப் போகிறேன். மறுபிறப்பின்றி நமக்கு என்ன கிடையாது? என்கிற கேள்விக்கு இதோ சுருக்கமான பதில்:
- மறுபிறப்பில்லையானால் நம்மிடம் இரட்சிப்பின் விசுவாசம் இருக்காது, அவிசுவாசமே மிஞ்சும் (யோவா 1:11-13, 1யோவா 5:1, எபே 2:8-9, பிலிப் 1:29, 1தீமோ 1:14, 2தீமோ 1:3).
- மறுபிறப்பில்லையானால் நாம் நீதிமானாக்கப்படுவதில்லை, ஆக்கினைத் தீர்ப்பையே அடைவோம் (ரோம 8:1, 2கொரி 5:21, கலாத் 2:17, பிலிப் 3:9).
- மறுபிறப்பில்லையானால், நாம் தேவனுடைய பிள்ளைகளாயிராமல், பிசாசின் பிள்ளைகளாயிருப்போம் (1யோவா 3:9-10).
- மறுபிறப்பில்லையானால், நாம் பரிசுத்தஆவியினாலே அன்பின் கனிகளைக் கொடுக்காமல், மரணத்திற்கேதுவான கனிகளையே கொடுக்கிறவர்களாயிருப்போம் (ரோம 6:20-21, 7:4-6, 15:16, 1கொரி 1:2, 2கொரி 5:17, எபே 2:10, கலாத் 5:6, 2தெச 2:13, 1பேது 1:2, 1யோவா 3:14).
- மறுபிறப்பில்லையானால், நாம் கடவுளோடுள்ள ஐக்கியத்தில் நித்தியமான மகிழ்ச்சியை அடைகிறவர்களாக இராமல், பிசாசோடும் அதன் தூதர்களோடும் சதாகாலமும் வாதையை அனுபவிக்கிறவர்களாக இருப்போம் (மத் 25:41, யோவா 3:3, ரோம 6:23, வெளிப் 2:11, 20:15).
நம்மைக் குறித்தும், கிறிஸ்துவின் மகிமையைக் குறித்தும், நமது இரட்சிப்பைக் குறித்தும் நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால், மறுபிறப்பு எப்படி மேற்கூறிய 5 காரியங்களோடு தொடர்புடையது என்பதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதைத்தான் நாம் அடுத்தபடியாகப் பார்க்கப் போகிறோம். இந்த முறை நான் அவைகளை, மறுபிறப்பினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்கிற விதத்தில் கூறி முடிக்க விரும்புகிறேன். அவைகளை தேவனுடைய வசனத்தைக் குறிப்பிட்டே சொல்லுவேன்.
கடவுள் நம்மை மறுபடியும் பிறக்கச் செய்யும்போது, இரட்சிக்கும் விசுவாசமானது தட்டி எழுப்பப்படுகிறது. நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறோம். 1 யோவா 5:1 - "இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்". இங்கே "பிறப்பான்" என்று சொல்லப்படவில்லை. தேவனால் "பிறந்திருக்கிறான்" என்றே கூறப்பட்டுள்ளது. நமது முதலாவது விசுவாசம்தான் மறுபிறப்பின் மூலமாக ஜீவனைப் பெற்றுக் கொண்டோம் என்பதற்கு சிறிய அடையாளமாக இருக்கிறது.
மறுபிறப்பு, விசுவாசத்தை விழித்தெழச் செய்து, நம்மைக் கிறிஸ்துவோடு இணைக்கையில் நாம் நீதிமானாக்கப்பட்டாயிற்று. அதாவது, அந்த விசுவாசத்தின் மூலமாக நீதிமான்களென்று கணக்கிடப்படுகிறோம். ரோம 5:1:"இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்". மறுபிறப்பு, விசுவாசத்தைத் தட்டி எழுப்புகிறது. அந்த விசுவாசமானது, நீதியைப் பெறுவதற்கு இயேசுக்கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கிறது. கடவுள் நமக்கு நீதியைத் தருகிறார். அப்படி அவர் தருவதற்கு காரணமாயிருப்பது கிறிஸ்து மாத்திரமே, விசுவாசம் மாத்திரமே.
மறுபிறப்பானது விசுவாசத்தை விழித்தெழச் செய்து கிறிஸ்துவோடு இணைத்து, நம்மை நீதிமான்களாக்குவதால் கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதற்குத் தடையாக இருந்த அத்தனை நியாயமான காரணங்களும் அகற்றப்படுகிறது. ஆகவே கடவுள் நம்மைத் தம்முடைய குடும்பத்துக்குள் ஏற்றுக் கொண்டு, அவருடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாக இருக்கும்படியாக நம்மை ஏற்றுக் கொள்ளுகிறார். யோவா 1:12:"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்". நாம் மனிதனுடைய விருப்பத்தின்படியாக அல்ல, கடவுளால் மறுபிறப்பை அடைகிறோம். நாம் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்கிறோம். கடவுள் நம்மை அவருடைய புத்திரராக அதிகாரபூர்வமாக ஆக்குகிறார். அவருடைய ஆவிக்குரிய பிள்ளைகளாகிறோம்.
மறுபிறப்பானது நம்மில் விசுவாசத்தை ஏற்படுத்தி, நம்மைக் கிறிஸ்துவோடு இணைக்கையிலே ஆக்கினைத்தீர்ப்பு யாவும் எடுத்துப் போடப்பட்டு, அதற்கு பதிலாக நீதிமானாகுதலும், புத்திரசுவீகார ஆவியும் நமது வாழ்வில் பிரவேசித்து அன்பின் கனிகளை நம்மில் உருவாக்குகிறது. கலாத் 5:6:"கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது. அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்". 1யோவா 3:14: "நாம் சகோதரரிடத்தில் அன்புகூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்". மறுபிறப்பு அடைந்தவனிடத்தில் அன்பு இருக்கும்.
முடிவாக, மறுபிறப்பானது விசுவாசத்தை உயிரடையச் செய்து, நம்முடைய நீதியாகிய கிறிஸ்துவோடே நம்மை இணைத்து, பரிசுத்த பாதையில் நடத்துகின்ற பரிசுத்தஆவியானவரை நம்மில் கிரியை செய்யும்படியாக அபரிமிதமாகத் தரும்போது நாம் மோட்சத்திற்கு செல்லுகின்ற குறுகிய பாதையில் செல்லத் தொடங்குவோம். பரலோக சந்தோஷத்தின் உச்சகட்டத்தை தேவனுடைய ஐக்கியத்தில் உணரத் தொடங்குவோம். "ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுக்கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவா 17:3). நமது புதிய ஜீவனுடைய சந்தோஷத்தின் உச்சகட்டம் கடவுள்தான்.
"ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் . . . நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம்" (யோவா 3:3, 7).